எனக்குள் ஒரு தேடல்


என் வாழ்வில் நான் என்னவாக விழைகிறேன் என்ற எண்ணம் எழ ஆரம்பித்த்பொழுது, நான் இதுவரை என்னவாகி இருக்கிறேன் என்ற கேள்வி முளைத்தது. ஒரு பொறியாளனாக இவ்வுலகில் எல்லாவற்றையும் ஒரு equation மூலமாகவும், ஒரு graphஆகவும் மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையும், அதற்கென ஒரு ‍Critical point-உம் இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

‘என் வாழ்வில் அந்த தருணம் என்று நிகழும்?’ என்ற எதிர்பார்ப்பே எல்லோர் மனதிலும் ஒருவித ஏமாற்றத்தோடே வாழ்க்கையைக் கடக்க வைக்கும். நான் அப்படி ஒரு தருணம் நிகழ்ந்தேவிட்டது என்று முடிவெடுத்தேன். அந்தத் தருணத்திற்கானத் தேடல் பல தெரிவுகளை என்முன் வைத்தது. சொல்லிக்கொள்ளும்படியான பல தருணங்கள் கம்பீரமாகவே எட்டிப்பார்க்க,


“61000 ரூபா ட்ரிப்?”

“முதல் காதல்?”

“யுவசக்தி?”

“கல்லூரி வாழ்க்கை?”

எல்லாவற்றையும் கடந்து ஒரு தருணம் உண்மையாகவே கண்ணில் பட்டது. அவ்வளவு சிறப்பான இடத்தில், சிறப்பான மனிதர்கள் நிரம்பி வழிய நிகழவில்லையென்றாலும், சிறப்பான ஒரு மாற்றம் தந்துவிட்டுச் சென்ற ஒரு தருணம் அது.

11வது முடித்தபிறகு, அறுபத்தோராயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பதினான்கு நாட்கள் சுற்றுலா சென்று வந்தேன். கேட்கவே ஆடம்பரமாகவும், அபத்தமாகவும் கூட இருக்கலாம் என்றாலும் அது தான் உண்மை. ஆனால், அது அல்ல சிறப்பான தருணம்.

சென்று திரும்பியதிலிருந்து,

“61000 ரூபா கொடுத்து என்னடா பார்த்த?”
“யாரல்லாம் பார்த்த? எங்கல்லாம் போன?”
“எதுலடா போன?” என எழுந்த அனேக கேள்விகளுக்கு, நிறுத்தாமல் பதில் சொல்லும் வண்ணம் நிறையவே கதைகள் இருந்தது என்னிடம்.

ஆனால், அன்று. 12‍ A. எங்களுக்கு பாக்யராஜ் என்றொரு ஆங்கில ஆசிரியர் இருந்தார். என்னை எழுப்பி, “What do you learn from those 14 days. Just share with your friends.” என்று கேட்டார். நான் அங்கு சென்றுவந்ததிலிருந்து, அதைப் பற்றி யோசிக்கவே இல்லை.

அங்கு சென்றோம், இங்கு சென்றோம். அவரைப் பார்த்தோம், இவரைப் பார்த்தோம். அதைச் செய்தோம், இதைச் செய்தோம். என்றுதான் இவ்வளவு நேரம் நான் அடுக்கிக்கொண்டிருந்தேன். திடீரென இந்த கேள்வியைக் கேட்டதிலிருந்து, அலையலையாக நான் சந்தித்த மனிதர்கள், மயில்சாமி அண்ணாதுரையிலிருந்து ஷீலா திக்ஷிட் வரை அனைவரும் பிம்பங்களாகத் தோன்றி மறைந்துகொண்டே இருந்தனர். எல்லோரையும் தாண்டி ஒருவர் வந்து நின்றார். என்ன நினைத்தேன் என்று தெளியாமல் சட்டென,

“I got my life message sir” என்றேன்.
“Where?”
“In Golden Temple sir, they gave free food for everyone. Chapati and Dal, sir”
“Chapathi?!!” என்பது போல அவர் பார்த்தார்.
மேலும் அதனால் நான் கற்றுக்கொண்டதைச் சொன்னேன். அவர் சரியென்று, பாடத்தைத் தொடர்ந்தார்.

ஆனால், அதன்பிறகு எத்தனைமுறை யோசித்துபொழுதும், எல்லா சாதனைமனிதர்களையும் தாண்டி அவரே வந்து நின்றார். எப்படி பார்த்தாலும், எனக்கு கற்றுக்கொடுத்தவருக்கு, பத்து வயதுக்கு மேல் இருக்காது. அமிர்தசரஸில் இருக்கும் தங்கக்கோயிலுக்குள் நாங்கள் உணவு உட்கொண்டிருக்கும்பொழுது, அவர் கையில் ரொட்டிகளுடன் வருவார். ரொட்டி வேண்டும் என்று கேட்டால் மட்டும் போதாது, தட்டை உயர்த்திப்பிடித்து கேட்கவேண்டும். அப்பொழுதுதான் அவர் ரொட்டியைத் தட்டில் போடுவார்.

யார் என்ன செய்தாலும், எங்கிருந்தாலும் உணவளிப்பவன் எப்பொழுதும் உணவு பெற்று உண்பவனைவிட மேலானவன் என்ற ஒரு செய்தியைத் தான் நான் அங்கு கற்றுக்கொண்டதாக வகுப்பில் கூறினேன்.

அதன்பிறகு சில நாட்கள், அந்த கேள்வியைவிட அதற்காக நான் ஏன் இந்த பதிலை அளித்தேன் என்ற கேள்வி என்னைத் துரத்திக்கொண்டே வந்த்து. ‘அந்த 14 நாட்களில் நான் வேறெதையுமே கற்றுக்கொள்ளவில்லையா என்ன?’ என்ற குற்றவுணர்வும்கூட வந்தது.

என் கனவு இடங்கள் பலவற்றைக் கண்முன் பார்த்துவிட்டு, திரும்பிய கடைசிநாள் கூட நான் மேடையில் எல்லோர்முன்னும்,
“I’m going to be the fastest man in this world. I’m going to travel in light speed.”
என்று ஏதோ ஏகவசனம் பேசியது எனக்கு நன்றாக நினைவுக்கு வந்தது. ஆனால், நான் ஏன் இதைக் கூறினேன்?

என் இலட்சிய இடமான ISROவில் ஒரு செயற்கைக்கோளை இன்னும் ஒரு வாரத்தில் விண்ணில் செலுத்தும் பணியிலும், எங்களுடன் நேரம் ஒதுக்கிப்பேசிய மயில்சாமி அண்ணாதுரையிடம் நான் எதுவும் கற்கவில்லையா?

எவ்வளவோ பேரை ஊக்குவித்த “You Can Win” என்ற புத்தகத்தை எழுதிய ஷிவ் கேராவுடன், அவர் வீட்டிற்கு சென்று உரையாடியபொழுதும், நான் எதுவும் கற்கவில்லையா?

எத்தனை மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள், எவ்வளவு பெரிய நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், யாரும் எளிதில் செல்லமுடியாத இடங்கள், பேச்சுகள், விவாதங்கள் எல்லாம் இருந்தபொழுதும், நான் கற்றது இதுவா? என்று கேள்விகள் அடுக்கிக்கொண்டே போயின.

ஆனால் அன்றுமுதல்தான் உலகம் உயர்ந்து விரிந்த மரங்களில் இல்லை, துளிர்த்து எழுகின்ற இலைநுனியில் என்பதை அறிந்தேன். அந்த கேள்வியே, என்னை தேடத் தூண்டியது. அந்த கேள்வியே என்னை அருகில் அமர்த்தி இளைப்பாற்றியது; கடந்த தென்றலில் மயங்கியிருக்கச் சொன்னது. எதையோ எண்ணி ஓடுவதை முதலில் நிறுத்தச் சொன்னது. மனம் சற்றே அமைதியடைந்தது.

என் பத்து வயதுகூட நிரம்பாத குரு கண்முன் தெரிந்தார். எந்த அறிவுரையும் எனக்குத் தரப்படவில்லை. கையிலிருந்த ரொட்டிகளை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே ஓடிவிட்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s