இணையில்லா இந்த நொடிகள்


இணையில்லா இந்த நொடிகள்
இறுக்கிப் பிடித்திருக்கும் இடிகள்
இன்னும் எத்தனையோ?
அது அவிழ்ந்து விழும் நேரம்
யார் கற்பனையோ?

வாழ்க்கையின் அதிசயத் தருணங்களில் மிக சொற்பமானவையே நம் திட்டங்களில் இருக்கிறது. நம் திட்டங்களில் இருந்து மீறி நடப்பவையே நம்மை அதிசயித்து நிற்கச் செய்கிறது. மூன்று நாட்கள் ரசித்து, களித்து, வியந்து, சேகரித்த அனுபவங்களின்  மூட்டையெல்லாம், மூன்று நொடிகளில்கூட முக்கியமில்லாமல் போய் மூலையில் முடங்கிக்கொள்கிறது.

கடைசியாக சென்னையைவிட்டு வீடு திரும்பும்போது…

ஆர அமர, சன்னலோரத்தில் அமர்ந்து கண் மூடுகையில் அலையலையாய் அழகழகாய் எண்ணங்கள், எவ்வளவு இனிய மனிதர்கள், எவ்வளவு பெரிய கதைகள்… மனிதனின் எந்த கண்டுபிடிப்பின் வேகமும் ஈடுகொடுக்கவே முடியாது, அவன் மூளைக்கு. முதலாம் ராஜாதிராஜனின் பிணத்தின்முன் மண்டியிட்டழும் இரண்டாம் ராஜேந்திர சோழனிலிருந்து, அடையாறு பாலத்தினடியில் அமர்ந்து சண்டையிடும் இரு மனநிலை குன்றியவர்களிலிருந்து, அரசுப்பள்ளி மாணவர்கள் முன்செல்லவேண்டுமென முழங்கும் சகாயம் முன் நிற்பதிலிருந்து, எங்கோ ஒரு கிராமத்தில் அன்பாக அணைக்கும் மாணவர்களின் மத்தியிலிருந்து, அனைத்து ஆரவாரத்திற்கும் இடையில் அதிர்ந்த நெருப்புடா வரையில், இப்படியே கற்பனைகள் தொடர்ந்திருக்கக் கூடாதா?

திடீரென நமக்கு வரும் நியாபகங்கள், சில நேரங்களில் தவறாகவும் முடிகின்றன. இரவு மணி 10 இருக்கும், பயணத்தின் நடுவில், சட்டென நினைவுகளை நிறுத்தி, கைப்பேசியை எடுத்து பார்த்ததற்கு, நான் தொலைத்த அழைப்புகள் அடுக்காக நிற்க, எடுத்து அழைக்க, எதிர்திசையில் நண்பன்,

“நியூஸ் வந்துச்சா?”

அரைத்தூக்கத்தில் என்னவென்று சரியாக கேட்காமல், மறுபடியும் விசாரிக்க,

“டேய் நியூஸ் வந்துச்சா?”

நியூஸ்…

அறிவியல் நகரத்தில், ஜூலை 22 அன்று சகாயம் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில், ப்ரேமானந்த் குழுவில் நானும் ஒருவனாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகளை நிகழ்த்திக் காட்டி, பிரமிக்கவைக்க சென்றிருந்தோம். பல சோதனைகள் வெளியில் நிகழ்த்திவிட்டு, உள்ளே செல்லும்பொழுது, ஒரு மாணவனிடம் பேசிக்கொண்டே…

’சார், இது டிவில வருமா சார்.. அது என்னது.. ஆன்… புதியதலைமுறை வச்சுருந்தாங்க.’

’அப்படியா, அப்போ வரும்.’

‘நியூஸ்ல வருமா சார், எப்ப சார் வரும்?’…

”என்ன ஆச்சுடா?”

”ஸ்ரீகாந்த் இறந்துட்டாண்டா…”

ஏன்? எப்படி? ஏது? எல்லாவற்றையும் விடுத்து, ஓர் உயிர் இறந்தது என்றே தொடர்வோம். சமீபத்தில், ஒரு பத்து நாட்களுக்கு முன் என் தாத்தாவும் இறந்திருந்தார். மரணம் கற்றுத்தரும் பாடம் தான் என்ன?

ஸ்ரீகாந்த் பிரபு, எங்களுள் நிறைய மீசை வைத்திருப்பவன், மிகுந்த ஆங்கிலப்புலமை பெற்றவன். கடைசிவரை முகநூல் பக்கம் எட்டிப்பார்க்காதவன். இளைஞன். மரணத்திற்கும் அவனுக்கும் குறைந்தது முப்பது ஆண்டுகள் இடைவேளையாவது இருக்க வேண்டும். விபத்தில் இறந்திருந்தான்.

அதிதீவிர நார்சிசவாதிக்கு, உலகத்தில் எல்லாம் தன்னைச் சுழன்றே நிகழும். முதலில் எழுந்த ஆயிரம் கேள்விகளுள் முக்கியமானது, ”நான் உயிருடன் வீடு சேர்வேனா இன்று?” மரணம் கற்றுத் தந்த முதல் பாடம், உயிர்பயம்.

அதன்பின் நிகழ்ந்த பயணம், அத்தனை சுவாரசியமாகத் தோன்றவில்லை. ஒரு விலங்கின் எல்லா புலன்களும் அதிர்வில் விழிப்புடன் இருப்பதைப் போன்றுணர்ந்தேன். ஒவ்வொரு வேகத்தடையும், ஒவ்வொரு நிறுத்தமும், அந்த பயத்தை வளர்க்கும் உணவாகின.

ஆயிரம் நினைவுகள் அவனைப் பற்றி, என்றாலும், அடுத்து தோன்றியது, ‘இன்னும் நிறைய நினைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம்’ என்கிற வருத்தமும் சேர்ந்தே ஆட்கொண்டது. உயிரின் நிலையற்றதன்மை உணர்ந்திருந்தபொழுதும், நம்மை சுற்றியிருப்பவர்களின் மரணத்தின்பொழுது தான், அதன் உண்மையான தாக்கம் உணரப்படுகிறது.

இந்த இணையில்லா ஒவ்வொரு நொடியும் யாருக்காகவும்  காத்திருப்பதே இல்லை. யார் அழுகைக்கும், யார் ஆர்பாட்டத்திற்கும், யார் கனவிற்கும், யார் போராட்டத்திற்கும், யார் அமைதிக்கும்கூட…

இணையில்லா இந்த நொடிகள், என்று எனக்கு முடியுமோ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s