About Panuval Book Store
Facebook: Panuval Thiruvanmiyur
Website: Panuval.com
மிகச் சிலராலேயே ஒருசில
நிமிடங்களில், அவர்கள் செய்யும் வேலை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று வெளிபடுத்துவது மட்டுமில்லாமல், காண்பவருக்கும் அதைப் பிடிக்கச்
செய்துவிட முடிகிறது. என் வாழ்வில் அவர்களைப் போன்றவர்கள் அரிதிலும் அரிது. முதன்முதலில் அப்படி ஒருவரை எங்கள் ஊரில் மசால்பூரி கடையொன்றில் கண்டேன். இன்றும், என் கடைசிகாலத்தில் மரம் வைத்து வாழ்வதைவிட மசால்பூரி கொடுத்து வாழலாம் என்றொரு கனவுண்டு.
அந்த வரிசையில் சமீபத்தில் சந்தித்த ஒரு ஓய்வுபெற்ற தொல்லியல்துறை பேராசிரியரும் சேர்ந்துள்ளார். பேராசிரியர் பத்மாவதி, இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற எந்த அறிகுறியும், கல்வெட்டுகளைத் தேடிப்போகும் அவரிடம் இருக்காது. கோயில்கள், மலைகள் எல்லாவற்றுள்ளும் ஏதோ புதையல் எடுக்கப்போகும் ஒரு சிறுமி போலவே அவர் செயல்படுவார்.
கடவுள் என்ற கொள்கையில் பெரிதும் நாட்டமில்லாமல் போனதிலிருந்து, கோயில்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. உள்ளேயுள்ள செயல்கள், வழிமுறைகளெல்லாம் தாண்டி ஏதாவது ஒன்றையாவது, ஒரு நல்ல கதையையாவது சொல்லுமா என்ற எதிர்பார்ப்பு மட்டுமே சில சமயங்களில் கோயில்களுள் என்னை இழுத்துச் சென்றிருக்கிறது. ஆனால், அந்த சுவர்கள் சொல்லாத கதைகளை, சிற்பங்கள் சொல்லாத கதைகளை, கடவுளும் சொல்லாத கதைகளை, பேராசிரியருடன் சென்ற பயணங்கள் சொன்னது.
பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூரில் இயங்கிவருகிறது. அதன்மூலம் வரலாற்றுப்பயணங்கள் நடத்துகிறார்கள் என்று நண்பன் ஒருவன் சொல்லித்தான் தெரியவந்தது. இதுவரை என்னால் மூன்று பயணங்களுக்கே செல்ல முடிந்திருக்கிறது. செஞ்சியில், சில சமணப்படுகைகள், கிராமம், ஜம்பை, திருவாலங்காடு ஆகிய இடங்களுக்கு இதுவரை பயணித்திருக்கிறேன்.
ஒவ்வொரு இடமும் சொல்லும் உண்மையான கதைகளை கேட்டுவிட்டு, எப்பொழுதும்போல் இது உண்மையா பொய்யா என விழிபிதுங்கும்பொழுது, அதுவும் அதையப்படியே கோயிலின் எல்லா சுவர்களிலும் செதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று ஒருமுறை படித்துப்பார்க்கும் பொழுது, அந்த தருணம் உண்மையிலேயே நெகிழ்வானது. அதைவிட நெகிழ்வானது, அதன் இறுதியில் பேராசிரியர் அந்த கதையின் நோக்கமும் பின்னணியும் குறித்து பேசும்போது ஏற்படுவதைத் தவிர்க்கவே இயலாது.
ஒரு கோயில் எந்த வடிவிலிருந்து எந்த சமயத்திற்கு சென்று, எந்த அடையாளங்களையெல்லாம் தாங்கி நிற்கிறது என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு, அதில் ஒன்றாமலே இருப்பதுபோல் பேசுவார். கடைசியாக சென்ற திருவாலங்காட்டு பயணத்தில் ஒரு எடுத்துக்காட்டாகக் கூறுவது என்றால், இரண்டாம் ராஜேந்திரனைப் பற்றி மெய்மறக்கும்படிக் கூறிவிட்டு, சோழப்பரம்பரை வரலாற்றை அப்படியே கூறிவிட்டு, ’கரிகாலன்’ என்றால், என்ன, கருப்பா கால் வைத்திருப்பவன் என்றா அர்த்தம், ‘கரி – ஆண் யானை காலன் – எமன்’. சிவன் ஏன் யானையை வதம் செய்வதுபோல் ஒருசில இடங்களில் இருக்கிறது? யானை யாருடைய அடையாளம்? என்று கேட்டுவிட்டு நின்றுவிடுவார்.
சைவ சமயக் கோயில்கள், வைணவக் கோயில்கள் எல்லாவற்றின் தலபுராணத்தையும் அழகாகக் கூறிவிட்டு, அதன் அடிபின்னணியில் இருந்த, சிறுதெய்வங்களையும், மற்ற சமயத்தின் அழிக்கப்பட்ட அடையாளங்களையும் போகிறபோக்கில் கூறிவிட்டு, நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார். சமயங்கள், வரலாறு குறித்து ஒரு நேர்மையான பார்வையும், நுட்பமான அணுகுமுறையும், அதீதக் காதலும் இவர் பயணங்களில் மூழ்கிவிட்டால் கட்டாயம் மேலெழும்.
அடுத்த பயணம், வரும் மாதங்களில் இருக்கும் என்றிருக்கின்றனர். தொடர்ந்து இதுபோன்ற நல்ல முயற்சிகளை மேலெடுப்பதற்கு பனுவலுக்கு நன்றிகள்.