இந்தியா, இந்தியா?


கேரளாவில் படிக்க சென்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. வகுப்பில், 20 பேர், அதில் பாதி மலையாள மாணவர்கள். மீதி அனைவரும், ஆளுக்கொரு மாநிலத்திலிருந்து வந்தவர்கள். என்னைத் தவிர, மற்ற மாநிலத்தவர் பலருக்கும், கேரளத்திலும் இந்தி பெருமளவில் பேசப்படுவதில்லை என்பதைப் பார்த்து சிறிது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஆரம்பத்திலிருந்து மொழி குறித்த பல்வேறு பார்வைகள், கருத்துவேறுபாடுகள், பரிமாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும் எனக்கும், சில நண்பர்களுக்கும். குறிப்பாக இந்தி குறித்து. ”ஏன் நீங்கள் இந்தி கற்கக்கூடாது?” என்பது போன்ற பல்வேறு கருத்துகள். கடவுள் நம்பிக்கை, சாதியம், மதம், சமூகக்கட்டமைப்பு போன்ற பல கருத்துகளில் ஒன்றுப்போகும் ஒரு வங்காள நண்பன் இருக்கிறான். அவன்கூட கருத்துவேறுபாட்டுடன் இருக்கும் ஒரே விஷயமாக ‘மொழி’ மட்டும் தொடர்ந்தது.

சில வேளைகளில் நானும் தவறான வாதங்களை வைத்ததுண்டு, அவனும், தேசிய மொழி போன்ற வாதங்களை வைத்ததுண்டு. ஆனால், இருவரும் இணைந்து பயணித்து பரிமாறியதில், நான் தெள்ளத்தெளிவாக அவனுக்கு புரியவைத்த ஒன்று. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் ஒரு தனி மொழிக்குடும்பத்துடன், தனக்கான தனி மொழியியலையும் உடையது. வடமொழி சார்ந்தெழுந்த இந்தியைத் தழுவியே வங்காளமோ, ஒரியாவோ, பஞ்சாபியோ, குசராத்தி போன்ற மொழிகள் உள்ளது என்பதைத் தான்.
அதற்கு நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை. நான் மலையாளத்தை எந்த அளவில் அவன் அறிவானோ அதே அளவிற்கே அறிந்திருந்தேன் இங்கு வரும்வரை (ப்ரேமம் கூட பார்த்ததில்லைபா). ஆனால், என்னால், எளிதில் உரையாடுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. நானும் கேரள மாணவர்களுடன் தமிழில் பேசும்பொழுது, அவர்கள் தமிழைப் புரிந்துகொண்டனர்.
ஆனால், இதற்கு எளிதான விளக்கம் அவன் தந்தான். அதுவும் சரியே. தமிழ், மலையாளத்திற்கு இருக்கும் புரிதல், வங்காளம் ஒரியாக்கும் உண்டு. இரண்டு ஒரிசா நண்பர்களும் உடன் படிக்கிறார்கள். ஒருசில வேளைகளில், அவர்கள் பேசுவது என் வங்காள நண்பன் புரிந்துகொள்வது உண்டு. எனவே, அதனால் தான் மலையாளம் புரியும் என்று சொல்லிவிடுவதற்கில்லை. ஏனெனில், இன்னொரு தெலங்கானாவிலிருந்து பயிலும் மாணவனால், ஒரியாவை உணர்ந்து கொள்ளமுடியவில்லை.
இந்த வாதத்தை நிறுவவே, மலையாள எழுத்துகளை எழுதும், படிக்கும் முயற்சியையும் ஆரம்பித்தேன். என்னதான், வடமொழியைப் போன்று, உச்சரிப்பின்படி பல எழுத்துகள் மலையாளத்தில் பிரிக்கப்பட்டிருந்தாலும், பல எழுத்துகள் அப்படியே தமிழில் இருந்து வந்தது என்பது நன்றாக தெரியும். மலையாளத்தில் எளிதாகவே படிக்கவோ, எழுதவோ கற்கவும் முடிகிறது. அதே போல், சில சமயம் தெலுங்கு நண்பர்கள் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது, கட்டாயமாக என்னால் தெலுங்கு பேசவரவில்லை என்றாலும், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதறிந்து, ஆங்கிலத்தில் பதில் கூறமுடிகிறது.
அதே போல், இந்தி அறிந்தால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் எங்குவேண்டுமானாலும் இருந்துவிடலாம் என்றிருந்த அவனும், நேற்று திடீரென்று, ”நான் புரிந்துகொண்டேன். நான் பஞ்சாப் சென்றால், பஞ்சாபி தெரியவில்லையென்றாலும், என்ன கூறுகிறார்கள் என்பதை உணரமுடியும், அதேபோல் மராட்டியையும் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில், அது இந்தியுடன் தொடர்புடைய மொழிகள். வங்காளமும், இந்திக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதில்லை. அதனாலேயே புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முடிகிறது. தமிழ் பேசுபவர்கள் இந்தி பிடிக்காமல் கற்றுக்கொள்ளவில்லை என்பது இல்லை. தமிழோ, மலையாளமோ இந்திக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிற ஒரு மொழி. அது கற்றுக்கொள்ள எளிதில் முடியாது, எனக்கு எப்படி மலையாளம் கற்றுக்கொள்ளமுடியாதோ அது போல. இதை வட இந்தியர்களால் எளிதில் உணர்ந்துகொள்ளவும் முடியாது.”
இதனால், நான் கூற விழைவது, இந்தி பலரும் பேசுவது அதுவே தேசியமொழி என்பதாலெல்லாம் இல்லை. அந்த மொழி, அவர்கள் மொழிக்கும் பெருவேறுபாடு இருப்பதில்லை. அதனால், அவர்கள் தங்கள் மொழியிலேயே பேசினாலும் கூட, அதை அந்த வழக்காடுமுறையான இந்தி எனக்கொண்டு புரிந்துகொண்டு போய்விட முடியும். இந்தி பெருவாரியான மொழிகளைப் போன்றே இருப்பதால், இந்தி பெருவாரியாக பேசமுடிகிறது. இதனாலேயே இந்தி ஒரு இந்தியாவையே இணைக்கும் மொழி என்ற மாயையில் நம்பி இருக்கிறோம். கேரளத்தின் ஒரு மூளையிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றால், அவர்கள் பேசும் மலையாளத்தை, தமிழ் தெரிந்தால் கூட எளிதில் புரிந்துகொள்ள முடியாது. எனவே பன்முகம்கொண்ட இந்தியாவை இணைக்க, இன்முகத்துடன் எல்லாவற்றையும் ஏற்று, எங்கிருக்கிறோமோ அதன் சூழல் கற்று வாழ்வதே சிறப்பு. அதற்கு ஒரு மொழி அவசியம் இல்லை.
துணைக்குறிப்பாக,
’தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம் எல்லாம் ஒரே மொழிக்குடும்பம் என்று சொன்னீங்களே, எந்த மொழிக்குடும்பம்னு சொல்லலையே?’
‘நான் சொல்லலையே.’ 😉
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s