மாயையோ?


நாட்டுப்பற்று நிரம்பி வழிந்துகொண்டிருந்தது
போர்வீரர்களுக்காக ஒரு நாள்.
உணர்ச்சிகள் பொங்கத்தான் செய்தது.
அடக்கமுடியாமல் ஒருவர்,
“எனக்கொரு பிள்ளை பிறந்தால்
எல்லைக்குத்தான் அனுப்புவேன்!”
கரவொலிகள் காற்றெங்கும் பரவின.
கழுத்துவரை வந்தடைத்தது,
ஏனோ என்னால் மட்டும்
அந்த குழந்தையின் கனவு
பறிக்கப்படுவதைப்பற்றியே கவலைக்கொள்ள முடிந்தது.
தேசத்துரோகிதான் இப்படி யோசித்திருப்பானோ?

நம் கனவில் பெற்றோர்கள்
தன் கருத்தைத் திணித்தல்
தவறென்றுணர்ந்த புதிய தலைமுறையன்றோ?

பின் எல்லா அறிவும்
தெளிவும் பின் தள்ளப்பட்டு
தேவையென்றாக்கப்பட்டு மேலெழும் போதையோ?
மாயையோ? நாட்டுப்பற்று?

Advertisements

பழைய தத்துவம்


ஒரு பரந்த குளத்தின்
மேல் இழையாய் நான்…
எனைப் பறந்து வந்து
மேல்தொட்ட மலரா அவள்?
தொடுவிசையால் குளிர்ந்தே
பனிமுழுதாய் உறைந்தேன்.
அவள்வசமென நினைத்தே
கண்களிறுக அயர்ந்தேன்.
ஒரு நெடிய அயர்ச்சியே,
இன்னும்…
புதிதாக சில்லென ஓர் குளிர்ச்சி
அவளேதான் என்று
பற்றிக்கொள்ள மேலெழுந்து
பனிக்கட்டிகளாய் சிதறி விழுந்து
வெட்டவெளியில் சுற்றிப் பார்த்தேன்.
எங்கும் பனிக்காலம்
முடியத் தொடங்குகிறது
புது வசந்தம் நோக்கி…

விண்மீன் சொன்ன கதை


வானத்து விண்மீன்கள்
விடைபெற்றுச் செல்லும்போது
வாழ்த்துச்செய்தி சொல்லியது…

நீ விதைத்த சிறுமரங்கள்
வான் நோக்கி மேல் வளர
வருடந்தோறும் பார்த்து வந்தேன்.
ஆட்டமாட சிலமரங்கள்
அழகுக்காக சிலமரங்கள்
அடிபட்டு வீழ்ந்தபோது
அழுகைச்செய்தி சொல்லி வந்தேன்.

ஆனால்,
அன்றொரு நாள் திடீரென்று
அடியோடு பெயர்க்கின்றார்.
ஆங்காங்கே சலசலப்பு…
அழகான பூங்காவாம்
அதனூடே மணிகூண்டாம்
அறிவார்ந்த மக்கள்சேர்ந்து
வானளாவ அமைப்பாராம்.

மணம்வீசும் பூங்காவில்
மணிபார்க்க நேரமேது?
இதமான பூக்களன்றி
நீ நடக்க வீதியேது?

இருந்தாலும் ஒருமாதம்
இருந்துதான் பார்ப்போமென்றேன்.
பலமாதம் கழித்துவந்து
பார்த்ததுமே பயந்து நின்றேன்.

மணமேதும் வீசவில்லை – அது
மலர்தானா? தெரியவில்லை.
எங்கேயும் நிழலில்லை – இது
எதற்கென்றே விளங்கவில்லை.

மரம் போல, செடி போல,
பொம்மைகள் வரிசையாக நின்றிருந்தன.
வான் நீள, சுற்றியுமே
விளக்குகள் பலவும் பளிச்சிட்டன.

உன் மரங்கள் உதிர்ந்தழிந்தன.
உடன் செல்கிறேன் நானும், நன்றி…

மண்மீன்களின் வெளிச்ச மிருக்க
விண்மீன்களில் வியப்பு மெதற்கு?
வான்நோக்கி உன்விழிகள் எதற்கு?
விடைபெறுகிறேன் நானும் மறைந்து…

புதுச்சாயம்


ஓட்டைக்கூரை
ஒட்டடைச்சுவர்
ஒன்றாக் கதவு
ஒருவரும் உள்ளே வாரா
வழியே…

ஓலை வேறு
ஓரசன்னலும் வேறு
ஓவியங்கள் மின்ன
புதுச்சாயம் பட்டு
அழைக்கிறதென்ன?

ஓட்டைகள் ஒட்டப்படும் முன்
ஓவியங்கள் எதற்கு?
ஒருவரும் பார்க்காமல்
ஊருக்கெல்லாம் புதுச்சாயம்…

கவிதை ஒன்று வந்தது


என் கருப்புமை வரிகளையெல்லாம்
காகிதம்கூட
களவாடிச் சென்றதடி
கவிதையே, நீ என்னைவிட்டுச் சென்றதால்…
கட்டி இழுக்க நினைத்தேன்.
கண்கள் விழித்து கொண்டதடி,
கனவு மீண்டு
கவிதை ஒன்று வந்ததடி…